Published : 03 Jan 2020 03:47 PM
Last Updated : 03 Jan 2020 03:47 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி மற்றும் 9 ஒன்றியத் தலைவர் பதவிகளை கைப்பற்றி தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது திமுக.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தபோதே அதிமுக 3 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், திமுக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இதையடுத்து வந்த மக்களைவை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி வெற்றிபெற்றார். இதன் மூலம் திண்டுக்கல்லில் திமுகவின் பலம் நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் பலத்தை தக்கவைத்துக்கொள்ள திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., திமுக கொறடா அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கிராமங்களில் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதன் விளைவாக மாவட்ட கவுன்சில் வார்டுகளில் 16 இடங்களில் வெற்றிபெற்று மாவட்ட கவுன்சில் தலைவர் பதவியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் பழநி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், சாணார்பட்டி, கொடைக்கானல் என 9 ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது திமுக.
திமுகவில் கோஷ்டிபூசல் இல்லாதது. கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்டுக்குள் வைத்துள்ள ஆளுமை ஆகியவையே திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தொடர்ந்து தேர்தல்களில் தனது பலத்தை நிரூபிக்க காரணமாக இருந்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக எந்தவித அரசு பதவிகளிலும் இல்லாத திமுகவினர் தற்போது மாவட்ட தலைவர், துணைத்தலைவர், ஒன்றியத்தலைவர், துணைத்தலைவர் என பல்வேறு பதவிகளில் அமர்வதன் மூலம் கட்சியை தொடர்ந்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்லமுடியும். இது அடுத்துவரும் சட்டசபை பொதுத்தேர்தலில் உதவும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் திமுகவினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் அதிகளவில் வெற்றிபெற்றதையடுத்து நேற்று திண்டுக்கல்லில் உள்ள மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமியை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இதுகுறித்து திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம், "மக்களுக்காக உழைக்க, குரல் கொடுக்க அதிகமான வாக்குகளை எங்களுக்கு மக்கள் அளித்துள்ளனர். வர இருக்கின்ற நகராட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் இந்த வெற்றி 100 சதவீதமாக ஆகும். இது மக்களுடைய எதிர்பார்ப்பு" என்றார்.
ஊராட்சித் தலைவர் பதவி வெற்றிப் பின்னணி:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் மொத்தம் 23 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள் உள்ளன.
எப்படியும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கினால் அது தேர்தல் முடிவை பாதிக்கும் என்று நினைத்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக 23 இடங்களிலும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களையே போட்டியிட வைத்தது.
இதனால் கூட்டணிக் கட்சியினர் அதிருப்திக்குள்ளாகினர். இதனால், அவர்களுக்கு ஒன்றிய கவுன்சில் வார்டுகளை ஒதுக்கி அதிருப்தியை போக்கினர்.
ஆனால், திமுக கூட்டணியில், கூட்டணிகளுக்கு தாராளம் காட்டப்பட்டது. காங்கிரஸ் 3, மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. மீதமுள்ள 18 வார்டுகளில் திமுக போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே திமுகவுக்கு சாதகமாக இருந்தது. முடிவில் திமுக கூட்டணியில் திமுக 16 இடங்களை கைப்பற்றியது. ஆனால் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
அதிமுக 7 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து பெரும்பான்மைக்கு தேவையான 12 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெற்றதால் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட கவுன்சில் தலைவர் பதவி எஸ்.சி(பொது) பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களில் எஸ்.சி(பொது) பட்டியலில் உள்ள ஒருவரை திமுக கட்சித்தலைமை ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT