Published : 03 Jan 2020 11:27 AM
Last Updated : 03 Jan 2020 11:27 AM
பெரம்பலூர் மாவட்டத்தில், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயது முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (ஜன.2) தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே ஆதனூர் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றவர் 72 வயதான மணிவேல். இவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 962 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 166 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சளி, இருமலால் கடந்த இரண்டு நாட்களாக மணிவேல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (ஜன.3) அதிகாலை 5 மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இவரது குடும்பத்தினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற்ற மறுநாளே இறந்த இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு ஜோதிமணி (65) என்ற மனைவியும், குமார் (48), சரஸ்வதி (45), அன்புச்செல்வன் (43), ஆனந்தி (40), ரமேஷ் (38) ஆகிய 5 பிள்ளைகளும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT