Published : 03 Jan 2020 08:37 AM
Last Updated : 03 Jan 2020 08:37 AM
கி.மகாராஜன்
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அனுபவம் இல்லாத ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் பிரிப்பது, எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றுஎண்ணப்பட்டன. பொதுத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு வருவாய்த் துறைமற்றும் ஆசிரியர்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடன் வங்கிப் பணியாளர்களும் வாக்குகளை எண்ணினர்.
இவர்களுக்கு வாக்கு எண்ணிக்கையில் போதிய அனுபவம் இல்லாததால், வாக்குகளை மாவட்டக் கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் என பிரிப்பது, சின்னங்களைப் பார்த்து அதற்கான பெட்டிகளில் போடுவது, எண்ணுவது என அனைத்துப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டது. பல இடங்களில் தபால் வாக்கு எண்ணிக்கையே பகல் 11 மணிக்கு மேல் தான் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கைக்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடும் படிவங்களை அதிகாரிகளுக்கு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை மேற்பார்வை ஊழியர்கள் பலர் தங்கள் பணி தெரியாமல் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி வலம் வந்தனர்.
ஒவ்வொரு மையத்திலும் ஸ்டிராங் அறைகளில் இருந்துசீல் உடைக்கப்படாத வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு, அதில் இருந்து வாக்குச்சீட்டுகள் தனியாகக் கொட்டப்பட்டன. பின்னர் மாவட்டக் கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டுகள் தனித்தனியே பிரிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அதற்கான அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டன.
பெரும்பாலான மையங்களில் தபால் வாக்குச்சீட்டுகளைப் பிரித்து வைக்க தனி பிளாஸ்டிக் ட்ரேக்கள் வைக்கப்படவில்லை. மேஜைகளில் அவை பாதுகாப்பு இல்லாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் தபால் வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு, யாருக்கு வாக்குப் பதிவானது என்பதை அதற்கான ஆவணங்களில் குறிப்பிடாமல், ஒரு நோட்டில் குறிப்பிட்டனர்.
மாவட்டக் கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணி முடிந்து பல மணி நேரமாகியும் முன்னிலை விவரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களும் எண்ணிக்கை முடிவுகளை எந்த அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.
பிரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் ஊழியர்கள் அறைகளைவிட்டு அடிக்கடி வெளியே சென்று திரும்பினர். ஊராட்சித் தலைவர்கள் பதவிக்குத் தேர்வானவர்கள் விவரம் பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், வேட்பாளர்களும், முகவர்களும், கட்சியினரும் தவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT