Published : 02 Jan 2020 08:09 PM
Last Updated : 02 Jan 2020 08:09 PM

கோவில்பட்டி: குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர்; தோற்றவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் சலசலப்பு

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டில்பட்டியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் சமமாக வாக்குகளைப் பெற்றதால் வெற்றி வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வானார்.

மெட்டில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜெயச்சந்திரன், கதிர்காமன், முனியசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த 30-ம் தேதி நடந்த தேர்தலில் 804 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில், ஜெயச்சந்திரன் 321 வாக்குகளும், கதிர்காமன் 319 வாக்குகளும், முனியசாமி 133 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதே போல், தபால் வாக்குகளில் ஜெயச்சந்திரனுக்கு ஒரு வாக்கும், கதிர்காமனுக்கு 3 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஜெயச்சந்திரன் மற்றும் கதிர்காமன் ஆகியோர் தலா 322 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர்.

இதையடுத்து ஊராட்சித் தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த குலுக்கலில் கதிர்காமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே வந்து, திடீரென அங்குள்ள மரத்தில் ஏறி, அந்த வழியாக சென்ற மின்கம்பியைப் பிடித்து தற்கொலை செய்ய போகிறேன் எனக் கூச்சலிட்டார்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் மரத்தில் இருந்து இறங்கி வந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x