Published : 02 Jan 2020 03:55 PM
Last Updated : 02 Jan 2020 03:55 PM
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த நெல்லை. கண்ணனை
வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு தொடர்பாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்த நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய விதத்தில் சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் மீது குற்றம் செய்யத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 504,505,505(2) மேலப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இன்று காலை அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர், அவர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. அதேபோல், உடல்நலனை சுட்டிக்காட்டி நெல்லை கண்ணன் தரப்பில் ஜாமீனும் கோரப்பட்டது.
ஆனால் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி பாபு நெல்லை கண்ணனை வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சேலம் சிறைக்கு மாற்றம்:
நெல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழறிஞர் நெல்லைக்கண்ணன் நிர்வாகக் காரணங்களுக்காக அவர் சேலம் சிறைக்கு மாற்றப்படுகிறார்.
பெரம்பலூரில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நெல்லை. கண்ணன் இன்று மதியம் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சுமார் 2 மணி அளவில் பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
ஆனால் அங்கே நிர்வாக காரணங்களினால் சிறையில் அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT