Published : 02 Jan 2020 01:56 PM
Last Updated : 02 Jan 2020 01:56 PM
ரயில் கட்டண உயர்வுக்கு மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புறநகர் ரயில்களைத் தவிர்த்து உயர்த்தப்பட்ட ரயில் டிக்கெட் கட்டணம் நேற்று முதல் (ஜன.1) நடைமுறைக்கு வந்தது. இதன்படி, புறநகர் ரயில்கள், புறநகர் ரயில்கள் சீசன் டிக்கெட் ஆகியவற்றின் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்க உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரயில் கட்டண உயர்வுக்கு மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.ஆர்.பாலு இன்று (ஜன.2) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு யாரும் எதிர்பாராத நேரத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் ஒருமாத காலத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ள நிலையில் திடீரென்று ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நிதி நிலை அறிக்கையில் மேலும் பெரிய அளவில் கட்டண உயர்வு இருக்குமோ? என்ற ஐயப்பாட்டை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் மீது பல வகையிலும் நிதிச் சுமையை ஏற்றி வருவது. இந்த அரசு நிதி நிர்வாகத்தில் மிக மோசமாக விளங்குகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ரயில் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தாமலும், தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றாமலும் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வரும் நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது வேதனைக்குரியதாகும்.
விமானக் கட்டணங்கள்கூட குறைந்து வரும் நிலையில், ரயில் கட்டணங்கள், விமானக் கட்டணங்கள் அளவுக்கு உயர்த்தப்படுவது கண்டனத்துக்குரியதாகும்.
எனவே, மத்திய அரசு சாமானிய மக்கள் பயணத்துக்கு ஏற்றதான ரயில் கட்டணங்களின் உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, நிதிநிலை அறிக்கைக்கு முன் ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்" என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT