Published : 02 Jan 2020 11:46 AM
Last Updated : 02 Jan 2020 11:46 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம்

பிரதிநிதித்துவப் படம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட 4 பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில், இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்த சமயத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ணாமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பாஞ்சாலை (65) என்பவர் போட்டியிட்டார். அவரது மனு ஏற்கப்பட்ட நிலையில் கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பாஞ்சாலை இறந்துவிட்டதாகக் கூறி அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது.

அதேபோல், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆணைபோகி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், மாவட்ட ஊராட்சி வார்டு எண் 26-ல் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் என மொத்தம் நான்கு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர்கள் புகார் மனு அளித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து வேட்பாளர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும் திட்டமிட்டப்படி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 மையங்களில் இன்று (ஜன.2) வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட 4 வேட்பாளர்களின் பதவிகளுக்கான வாக்கு எண்ணும் பணி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நான்கு பதவிகளுக்கான வாக்கு எண்ணும் பணி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு வாக்குச் சீட்டுகள் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறும்போது, "மாநில தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்ட தெளிவுரைகளின்படி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட 4 பதவிகளுக்கு பதிவான வாக்குச் சீட்டுகள் மட்டும் நிறம் வாரியாக வகை பிரிக்கப்படும். தொடக்க நிலையிலே வாக்குச் சீட்டில் யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மறைத்து 50 வாக்குச் சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டப்படும்.

இதில், 50-க்கும் குறைவாக கடைசியாக எஞ்சிய வாக்குச் சீட்டுகள் கட்டு கட்டப்பட்டு அதன் மீது வாக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். பின்னர், மொத்த வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து கணக்கு சரிபார்க்கப்படும். வாக்குக் கட்டுகளை வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் காலி வாக்குப் பெட்டியில் வைத்து மூடி முத்திரையிடப்படும்.

வாக்குப் பெட்டியை துணிப் பையில் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலரால் மூடி முத்திரையிடப்படும். அதன் மீது தேர்தல் தொடர்பான விவரங்களை எழுதி ஒட்டப்படுவதுடன் அந்த தேர்தலுக்குரிய வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அரசு கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும். இந்தப் பெட்டிகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவுரை பெறப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x