Published : 01 Jan 2020 11:21 AM
Last Updated : 01 Jan 2020 11:21 AM
அவசர அழைப்பு தகவலை பெற்ற 4 நிமிடங்களில், மாநகர காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தில் ஏராளமான துறைகள் இருப்பினும், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது காவல்துறை. அவசர காலங்களில், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க, அரசு நிர்வாகம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவ சேவை ஆகியவற்றுக்கு தனித்தனியே 3 இலக்க தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. சட்டம் - ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள், போக்குவரத்து சார்ந்த புகார்கள் தொடர்பாக, காவல் துறையின் பிரத்யேகமான ‘100’ என்ற தொலைபேசி எண் தொடர்பு கொள்ளப்படுகிறது.
இப் புகார்களை பெறும் சென்னை பெருநகர காவல்துறையின் நவீனகாவல் கட்டுப்பாட்டு அறை காவலர் கள், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள் கின்றனர். இவ்வாறு நடவடிக்கை எடுப் பதில், கோவை மாநகர காவல்துறை முன்னணியில் இருப்பதாக காவல் ஆணையர் தெரிவிக்கிறார்.
மாநகர காவல் ஆணையர் தலைமையில் செயல்படும் மாநகர காவல்துறையில், சட்டம் ஒழுங்குக்கு 15 காவல் நிலையங்கள், குற்றப்பிரிவுக்கு 12 காவல் நிலையங்கள், போக்குவரத்துப் பிரிவுக்கு 8 காவல் நிலையங்கள் உள்ளன. இதுதவிர, மாநகர மத்திய குற்றப்பிரிவு, சைபர் குற்றப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு, மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன.
5 பிரிவுகளில் மதிப்பெண்
இதுதொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக, மேற்கண்ட காவல்நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, தினசரி கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகவல்கள் பெறப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றன. சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை காவல்துறையினர், தாங்கள் தெரிவித்த அவசர அழைப்புகள் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தனரா என்பதை, மறுநாள் தகவல் தெரிவித்த நபரை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றனர். அவர்கள் தெரிவிக்கும் பதிலை கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறைக்கு ‘Good, Very Good, Excellent, Average, Poor’ ஆகிய 5 பிரிவுகளில் மதிப்பெண் வழங்குகின்றனர். கடந்த 8 மாதங்களாக வழங்கப்படும் இந்த மதிப்பெண்ணில், கோவை மாநகர காவல்துறை தொடர்ந்து சிறப்பான இடத்தில் உள்ளது’’ என்றனர்.
தொடர் ரோந்து
மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும்போது, ‘‘மாநகரில் 24 மணி நேரமும், 2 ஷிப்ட் அடிப்படையில் தொடர் கண்காணிப்புப் பணியில் 44 இருசக்கர வாகன ரோந்து குழுவினர், 28 ஜீப் ரோந்து குழுவினரும் உள்ளனர். இவர்கள், தினசரி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். விஐபி வருகை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த ரோந்து குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபடுவர்.
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்த அடுத்த நிமிடத்தில், ரோந்து குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அடுத்த 3 முதல் 4 நிமிடங்களில் அக்குழுவினர், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு, மைக் மூலமாக கட்டுப்பாட்டு அறைக்கு விவரத்தை தெரிவிப்பர். அந்த பதிலை கட்டுப்பாட்டு அறை காவலர் பதிவு செய்யும்போது, அது சென்னை கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிந்துவிடும். அவசர அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை காவலர்கள் நடத்தும் வாராந்திர ஆய்வில், கோவை மாநகர காவல்துறை தொடர்ச்சியாக 5 மதிப்பெண்ணுக்கு 4.5, 4.6 என்ற அடிப்படையில் மதிப்பெண் பெற்று வருகிறது. அவரச அழைப்புகள் மீது மாநகர காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதை, இந்த மதிப்பெண் காட்டுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT