Published : 01 Jan 2020 08:13 AM
Last Updated : 01 Jan 2020 08:13 AM

வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புடன் பணியாற்றுங்கள்: அதிமுக முகவர்களுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைமுகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள வர்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றியை சிந்தாமல், சிதறாமல் பெற்று, கட்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும். குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜன.2-ம்தேதி அதிமுகவின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுடைய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதா, வாக்குப்பெட்டிகள், இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா, பதிவான வாக்குகள், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகள் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டுள்ளவர்கள் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருந்தால் மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு நடத்தப்படுகிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

இறுதிவரை கண்காணியுங்கள்

அதிமுகவின் முகவர்கள் அனைவரும் தங்களுக்கான மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்துவெளியில் வரவேண்டும். அதிமுகசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்கள் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில், பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை இறுதிவரை கண்காணிக்க வேண்டும். அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யவும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும்விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x