Published : 31 Dec 2019 05:34 PM
Last Updated : 31 Dec 2019 05:34 PM

ஸ்டாலின் குறித்து அவதூறு பேட்டி: எச்.ராஜாவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்

சென்னை

ஸ்டாலின் குறித்தும், வழக்கறிஞர் சமூகம் குறித்தும் அவதூறாகப் பேட்டி அளித்ததாக திமுக வழக்கறிஞர் இள.புகழேந்தி எச்.ராஜாவுக்கும், பிரசுரித்த நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் எச்.ராஜா பேட்டி வெளியானது. அதில் எச்.ராஜா திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் அவரைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் அதற்கு எச்.ராஜா வருத்தம் தெரிவிக்காவிட்டால் சிவில் வழக்குத் தொடரப்படும் என வழக்கறிஞர் இள.புகழேந்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவரது வக்கீல் நோட்டீஸ் விவரம்:

''நான் கடலூரில் வழக்கறிஞராக, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 26-ம் தேதி அன்று கடலூர் நகர கட்சி நிர்வாகிகள் என்னைச் சந்தித்து 25-ம் தேதி (புதன்கிழமை) அன்று வெளிவந்த நாளிதழில் வந்த எச்.ராஜாவின் பேட்டியைக் காட்டினர். நாளிதழ் ஆசிரியரின் ஒப்புதலுடன் அப்பேட்டி வெளியிடப்பட்டதாக அறிகிறேன்.

அந்தப் பேட்டியில் எச்.ராஜாவின் படம் பெரிதாக பிரசுரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வெளிவந்துள்ளது. அதில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்துப் பேசும் எச்.ராஜா, தேவையில்லாமல் திமுக தலைவர் மு க ஸ்டாலினைப் பற்றியும், நாட்டின் தலை சிறந்த நீதிமான்கள் விளங்கும் அனைவரும் ஏற்றுக்கொண்ட கற்றறிந்த வழக்கறிஞர்களை மிகவும் இழிவாக அவமரியாதையாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டபூர்வமான குடிமகன் குடியுரிமை இழக்க மாட்டார், சட்ட அறிவீலிகள் இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்கின்றனர் என்றும், பேட்டியின் தொடர்ச்சியில் ‘ஸ்டாலின் மதவெறியைத் தூண்டி கலவரம் செய்ய நினைப்பதால்’ என்று கூறியுள்ளதும், எனக்கும் நாளிதழைக் கொண்டு வந்த தோழர்களுக்கும் மிகுந்த மனவேதனையைத் தந்தது.

மன உளைச்சலால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எச்.ராஜாவின் பேட்டி தரக்குறைவான வார்த்தைகளால் எங்கள் மதிப்பிற்குரிய, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின், நற்பெயரைச் சீரழிக்க நினைத்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. அதேபோல் அறிவில் முதிர்ந்தவர்களையும், வயதில் மூத்த வழக்கறிஞர்களை அறிவீலிகள் என்ற வார்த்தையால் அவமதித்தது மட்டுமல்லாமல் அவமரியாதையும் செய்துள்ளார் எச்.ராஜா.

எச்.ராஜா பொதுமக்களிடம் மிகவும் மோசமாக எங்கள் தலைவர் பற்றியும், கற்றறிந்த சட்ட வல்லுநர்கள் பற்றியும் மிகவும் தவறான தகவல்களை அளித்து பொதுமக்கள் அவர்களின் பார்வையில் நன்மதிப்பைக் குறைக்கும்படி பேட்டி அளித்துள்ளார். இந்த அவதூறுப் பேட்டியை நாளிதழ் ஆசிரியர் பெரிதாகப் பிரசுரித்துள்ளார் .

இந்தச் செயல்கள், எனக்கும் என் கட்சிக்காரர்களுக்கும் மிகவும் மனவேதனை அளித்துள்ளன. எனவே இருவரும் தலைவர் ஸ்டாலினிடமும், கற்றறிந்த வழக்கறிஞர்களிடமும், கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமும், தவறுக்கு வருந்தும் விதமாக அதே நாளிதழிலேயே இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாளில் அதே நாளிதழில் மன்னிப்புக் கேட்டு செய்தியாக வெளியிடவேண்டும்.

தவறினால் எங்கள் சார்பில் சட்டப்படி சிவில் குற்றவியல் வழக்குகள் இருவர் மீதும் போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குச் செலவையும் தாங்களே பொறுப்பு ஏற்கவேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு இள.புகழேந்தி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x