Published : 31 Dec 2019 04:53 PM
Last Updated : 31 Dec 2019 04:53 PM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் 660 மில்லி கிராம் தங்கத்தில் 2020-ம் ஆண்டின் மாத காலண்டரை வடிவமைத்து சாதனை செய்துள்ளார்.
சிதம்பரம் நகரைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன். இவர் இளமையாக்கினார் தெருவில் தங்க நகைகள் செய்யும் தொழில் கூடம் வைத்துள்ளார். இவர் சிறு வயது முதல் தங்க நகைகளைச் செய்து வருகிறார். இவர் கைத்தொழிலில் மட்டும்தான் மிக நுட்பமான நகைகளைச் செய்யமுடியும் என்று அவ்வப்போது மிகவும் குறைவான எடை கொண்ட தங்கத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்களைச் செய்து வருகிறார்.
தாஜ்மஹால், சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொற்கூரை, மின்விசிறி, கை விசைப் பம்பு, வேளாங்கண்ணி கோயில், தொட்டில் குழந்தை திட்ட விழிப்புணர்வுக்குத் தங்கத் தொட்டில், மூக்குக் கண்ணாடி, சிவலிங்கம், நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள், கிரிக்கெட் விளையாட்டின் உயரிய விருதான உலகக்கோப்பை, தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றை மிகக் குறைந்த எடை கொண்ட தங்கத்தில் சிறிய அளவில் செய்து முத்துக்குமரன் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் 2020-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக 12 சீட்டுகள் கொண்ட 2020-ம் ஆண்டு மாத காலண்டரை 660 மில்லி தங்கத்தில் வடிவமைத்துள்ளார். இதன் நீளம் 18 மில்லி மீட்டர், அகலம் 12 மில்லி மீட்டராக உள்ளது. இதனை 3 மணிநேரத்தில் வடிவமைத்துள்ள முத்துக்குமரன், காலண்டரில் முக்கிய பண்டிகை தினங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பொற்கொல்லர் முத்துக்குமரன் கூறுகையில், ''கடந்த 2000-ம் ஆண்டில் அப்துல் கலாம் கூறுகையில், 2020-ம் ஆண்டு இந்திய வல்லரசாக மாறும். இதனை விஷன் 2020 ஆண்டாக கொண்டாடக் கனவு காணுங்கள் என்று கூறியிருந்தார். அதனையொட்டி இந்த ஆண்டை வரவேற்கும் விதமாக இதனைச் செய்துள்ளேன். இதே போல் பல பொருட்களை சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து வருகிறேன். கைத்தொழில் மூலம் தங்க நகை உள்ளிட்ட பொருட்களைச் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்று செய்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்து சான்று வழங்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT