Published : 31 Dec 2019 01:41 PM
Last Updated : 31 Dec 2019 01:41 PM
கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வரும் பின்பற்றி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், ஆளும் இடதுசாரிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
இதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கவும் ஒரு நாள் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் கூட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதன்படி, கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.
சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்து தாக்கல் செய்தார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை:
“கேரள சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.
ஆகவே, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT