Published : 31 Dec 2019 08:43 AM
Last Updated : 31 Dec 2019 08:43 AM
தி.மலை/புதுக்கோட்டை/தூத்துக்குடி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றபோது வாக்களிக்க வந்த 2 வாக்காளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சத்தியராஜ் (25), பக்கிரி தக்கா சையத் மீர்ஷர் உசேனி நகரில் உள்ள உருது தொடக்கப் பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியை அடுத்த கலக்குடியைச் சேர்ந்த விவசாயி சோமையா(60), வாக்களிப்பதற்காக நாகுடி அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு நேற்று சைக்கிளில் சென்றார். சைக்கிளில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சோமையா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வடக்குத் தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரான சோபன்(44), ஆழ்வார்திருநகரி ஊராட்சிஒன்றியம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இப்பகுதிக்கான தேர்தல் கடந்த 27-ம் தேதி நடந்தது.
நேற்று முன்தினம் மாலை சோபனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடியைச் சேர்ந்த மோகன் மனைவி மல்லிகா(42), நெடுவாசல் மேற்கு ஊராட்சி5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார்.
தேர்தல் நாளான நேற்று வாக்குச்சாவடி செல்வதற்கு வீட்டில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மல்லிகா, அங்குஉயிரிழந்தார். இதையடுத்து, வாக்குச்சாவடியில் இவரது பெயர், சின்னம் கோடிட்டு நீக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT