Published : 31 Dec 2019 08:26 AM
Last Updated : 31 Dec 2019 08:26 AM

தீவுத்திடல் அருகே கூவம் ஆற்றங்கரையில் குடியிருப்போரை அகற்றும் பணி நிறுத்தம்: மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு அரசு தற்காலிக நடவடிக்கை

சென்னை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.

சென்னை

சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, கூவம், அடையாறு ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்களை அகற்றி மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வில், ஆற்றங்கரை ஓரங்களில் 14 ஆயிரத்து 257 வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை அகற்றும் பணி தொடங்கியது. அவ்வாறு அகற்றப்படும் குடும்பத்தினர் பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் வீடுகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீவுத்திடல் அருகே சத்யவாணிமுத்து நகர் பகுதியில் வசித்து வரும் 2,092 குடும்பங்களை அகற்றி, பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யும் பணிகள் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கின. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் ஏப்ரலில் தேர்வு எழுதவுள்ளதால், அதுவரை தங்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சம்பவ இடத்துக்கு வந்து மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்களின் நிலையை எடுத்துரைத்தார். இதையடுத்து, “பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு முடியும் வரை வீடுகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்" என்று துணை முதல்வர் உறுதியளித்திருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

வீடுகள் அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தமிழக அரசுக்கும் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி கூறும்போது, “சத்யவாணி முத்து நகரில் இதுவரை 150 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. மக்களின் கோரிக்கையை ஏற்று வீடுகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு இப்பணி தொடரும். அதுபற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார். கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள சத்தியவாணி முத்து நகர்.சென்னை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. படங்கள்: க.பரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x