Published : 31 Dec 2019 08:18 AM
Last Updated : 31 Dec 2019 08:18 AM
கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுத முடியும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார்.
அகத்தியர் பிறந்த மார்கழி திங்கள் ஆயில்ய நட்சத்திர நாள் (ஜனவரி 13-ம் தேதி) தேசிய சித்த மருத்துவ தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 50 நாள் கொண்டாட்டம் கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் சித்த மருத்துவத்தின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. டாக்டர் ஆர்.மீனா குமாரி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், சித்த மருத்துவ அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் டாக்டர் ஆர்.மீனாகுமாரி பேசியதாவது:
பண்டைய காலத் தமிழர்கள் மருத்துவத்திலும் சிறந்து விளங்கினர். தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் தொன்மையானது. செம்மையானது. மதுரை அருகே உள்ள கீழடியில் கிடைத்த ஆதாரங்களில் இடைநிலையில் கிடைத்தவற்றில் இரண்டை மட்டுமே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பியதில் அவை 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை வெளிச் சத்துக்கு வந்துள்ளது.
வெறும் 50 சென்ட் அளவில் மட்டுமே அங்கு தோண்டிப் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் அகழாய்வு செய்தால் ஒரு மிகப்பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது.
அதில் சித்த மருத்துவத்துக்கான தொன்மை புலப்படுவதோடு மருத்துவ வரலாற்றைத் தமிழகத்தில் இருந்து எழுத வேண்டிய காலம் வரும்.
இவ்வாறு டாக்டர் ஆர்.மீனாகுமாரி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT