Published : 30 Dec 2019 05:35 PM
Last Updated : 30 Dec 2019 05:35 PM
கடலூர் மாவட்டம் குமராட்சியில் 76 வயதான மூதாட்டி கழி ஊன்றியபடியே தள்ளாடியவாறு தானாக நடந்து சென்று வாக்களித்தார்.
தமிழகத்தில் இன்று (டிச.30) 27 மாவட்டங்களில் உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த ஒன்றியங்களில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46,639 பதவிகள் உள்ளன. இதில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட பதவிகள் போக, இதர பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள். 76 வயது மூதாட்டியான இவர், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கழி ஊன்றியபடி தள்ளாடி நடந்து சென்று வாக்களித்தார்.
இது குறித்து அஞ்சம்மாள் கூறுகையில், "நான் எந்தனை வருடம் உயிரோடு இருப்பேன் என்று தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. அதனால் தான் தடுமாறி நடந்து வந்து வாக்களித்தேன். எனது உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது இப்படி வந்து வாக்களித்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் எனது கடமையை செய்துள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT