Published : 30 Dec 2019 03:23 PM
Last Updated : 30 Dec 2019 03:23 PM
மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போலீஸார், தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு, கெடுபிடி இல்லாததால் வாக்குச்சாவடி அமைந்த பள்ளி வளாகத்தில் நுழைந்தும், வாக்குச்சாவடிகளருகே அருகே நின்றும் வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களிடம் சின்னத்தை சொல்லி வாக்கு சேகரித்தனர்.
முதற்கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. மதுரை மாவட்டத்தில் எந்த சர்ச்சையும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும் இல்லாமல் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
இதனையடுத்து இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. *காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதியவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் கூட, வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கைத்தாங்கலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். அதேபோல் முதல்தலைமுறை வாக்காளர்களும், நீண்ட வரிசையில் முதல் முறையாக ஆர்வமாக வாக்களித்தனர்.
கைக்குழந்தைகளுடன் வந்த பெண்களை, போலீஸாரே வரிசையில் நிற்கவிடாமல் அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வேட்பாளர்கள் தங்கள் சொந்தமான வாகனங்கள், வாடகை வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க வைக்கக்கூடாது என்று விதிமுறையுள்ளது.
ஆனால், வேட்பாளர்கள் ஆட்டோக்களையும், மினி வேன்களையும் வாடகைக்கு அமர்த்தி, வாக்காளர்களை வாக்குச்சாவடி வரை அழைத்து வந்து வாக்களிக்க அனுமதித்தனர். போலீஸார், அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
* பனையூரில் வாக்குச்சாவடிக்குள் நின்று கொண்டு அதிமுக, திமுக கட்சிக்காரர்கள், சுயேச்சையாக போட்டியிடுகிறவர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த போலீஸார், அவர்களை எச்சரித்து அவர்களிடம் இருந்த தேர்தல் ஆவணங்களை பறிமுதல் செய்து விரட்டியடித்தனர்.
* வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படாததால் வாக்குச்சாவடி வளாகத்தில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும், அதற்குக் காரணமான கட்சிக்காரர்கள், வேட்பாளர் ஆதரவாளர்களயும் போலீஸார் செல்போனில் படம்பிடித்தும், வீடியோவில் பதிவு செய்து ஆவணப்படுத்தினர்.
* திருப்பரங்குன்றம் அருகே சிலைமானில் வாக்காளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட ‘பூத்’ இருந்தும் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவர்கள் விடுபட்டதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்தனர். இதேபோல், பல வார்டுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு தேர்தல் அதிகாரிகள் அவர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அந்த பட்டியலில் இருக்கிறவர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.
* நாகமலைபுதுக்கோட்டை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பூத் ஸ்லிப்புகள் வழங்கப்படவில்லை. ஆனாலும், உரிய ஆவணங்களோடு வாக்களிக்க வந்தவர்களை தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர்.
* வாக்குச்சாவடிகள் செயல்பட்ட ஊர்களில் டீ கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால், வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களுக்கு கடந்த காலங்களை போல் வேட்பாளர்கள் டீ, போண்டா, வடை கொடுத்து கவனிக்க முடியில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT