Published : 30 Dec 2019 12:07 PM
Last Updated : 30 Dec 2019 12:07 PM
இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய இயலாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாது, வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையாக இயங்கக்கூடிய அமைப்பு அது நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கௌரி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேலுமணி, தாரணி அமர்வு முன்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கையை முழுவதுமாக வீடியோபதிவு செய்யக்கோரி முறையிட்டனர்.
அதற்கு நீதிபதிகள் ஏற்கெனவே இவ்வாறு விதிகள் உள்ளன. அவை மீறப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனக் கூறினர். தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ஆஜராக அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய இயலாது? எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையாக இயங்கக்கூடிய அமைப்பு அது நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.
இதுபோன்ற ரிட் மனுக்களை தாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மதியம் 1.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT