Published : 30 Dec 2019 10:05 AM
Last Updated : 30 Dec 2019 10:05 AM
மதுரையில் காலை 9 மணி நிலவரப்படி 8.12% வாக்கு பதிவாகியுள்ளது. காலை 9 மணி வரை மொத்தம் 46,339 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, உத்தபுரம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த டிச. 27-ல் மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், வைகை ஆற்றுக்குத் தென்பகுதியிலுள்ள திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி 8.12% வாக்கு பதிவாகியுள்ளது.
நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட என்ஜிஓ காலனி பூத் ஸ்லிப் வழங்கப்படவில்லை. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிறிது நேரம் தாமதமானது. அதன் பின்னர் உரிய ஆவணங்களுடன் வந்தவர்களுக்கு வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சர்ச்சை நிலவியது.
இதேபோல் திருமங்கலம் பன்னிக்குண்டு வாக்குச்சாவடியில் திமுக சின்னம் இருந்ததாக ஆளுங்கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் தலையிட்டு சின்னங்களை அப்புறப்படுத்தினர்.
திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட தனக்கன்குளம் வாக்குச்சாவடியில் அதிகாலையில் வாக்குப்பதிவு ஆயத்தப் பணிகளை ஊழியர்கள் தொடங்கியபோது மின்சாரம் இல்லை. இதனால் தேர்தல் வேலையை ஊழியர்கள் செல்ஃபோன் வெளிச்சத்தில் வேலை செய்தனர்.
விளாச்சேரி, கொக்குளம், நாட்டார்மங்கலம், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, உத்தபுரம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிலைமானில் சர்ச்சை..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் யூனியன் சிலைமான் பஞ்சாயத்து 2-ம் கட்ட தேர்தலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பூத் ஸ்லிப் இருந்தும் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டு இருப்பதால் வாக்களிக்க முடியாமல் தவித்தனர். ஆளுங்கட்சியினர் குளறுபடி ஏற்படுத்தியதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 மணி நிலவரம்:
திருப்பரங்குன்றம் - 7.35%
உசிலம்பட்டி - 9.75 %
செல்லம்பட்டி - 10.1%
சேடப்பட்டி -11.42%
திருமங்கலம் - 7. 22%
T. கல்லுப்பட்டி - 10.68%
கள்ளிக்குடி - 12. 81%
பதிவான மொத்த வாக்கு சதவிகிதம் 8.12%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT