Published : 30 Dec 2019 09:52 AM
Last Updated : 30 Dec 2019 09:52 AM
தஞ்சையில் ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 91,975 பதவிகளுக்கு, 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3,643 மனுக்கள் நிராகரிக் கப்பட்டன. 48,891 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மேலும் 18,570 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இறுதியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. திருவள்ளூரில் வாக்குப்பெட்டிக்கு தீ வைப்பு, புதுக்கோட்டையில் வாக்குப்பெட்டியுடன் ஓட்டம் என ஒரு சில சம்பவங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் அமைதியாக நடந்தது. அந்தப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், எஞ்சியுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட் பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஒன்றியங்களில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத் தம் 46,639 பதவிகள் உள்ளன. இதில் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்ட பதவிகள் போக, இதர பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில், 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதல்கட்ட தேர்தலின்போது வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கியது, வாக்குச்சீட்டுகளில் சின்னங்கள் மாற்றி அச்சிட்டிருந்தது, வேட்பாளர் பெயர், சின்னம் இடம் பெறாமல் இருந்தது, வாக்குப் பெட்டிக்கு தீ வைத்தது போன்ற காரணங்களால் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் நிறுத்தப் பட்டது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 உட்பட மொத்தம் 30 வாக்குச்சாவடிகளில் டிச. 31-ம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, சில வாக்குச் சாவடிகளுக்கு இன்றும், இதர வாக்குச்சாவடிகளுக்கு நாளையும் மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்நிலையில் தஞ்சையில் ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மாதிரி வாக்குச்சீட்டு படிவத்திற்கும், வாக்குச்சீட்டிற்கும் வேறுபாடு உள்ளதால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT