Published : 30 Dec 2019 07:35 AM
Last Updated : 30 Dec 2019 07:35 AM
தேனி மாவட்டம் பெரியகுளம், போடி மலைப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரைகளில் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், கரும்பாறை, குறவன் குழி, பெரிய மூங்கில், சிறிய மூங்கில் உட்பட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு ஊத்துக்காட்டில் வாக்குச் சாவடி உள்ளது.
இந்த மலைச்சாலையில் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக இந்த சாவடிக்கான வாக்குப்பெட்டிகள் குதிரையிலேயே கொண்டு செல்லப்படுவது வழக்கம். வாக்குச்சாவடி அலுவலர்களும் நடந்தே செல்வர்.
இந்த வாக்குச்சாவடியில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காகப் போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து மண்டல அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் 14 தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய 4 போலீஸாரின் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகளை எடுத்துக்கொண்டுலாரியில் சென்றனர். சோத்துப்பாறை அணைப் பகுதிக்குச் சென்றதும் குதிரை மீது வாக்குப் பெட்டியைஏற்றிய அதிகாரிகள் பின்னர் 7 கி.மீ.தூரம் மலைச்சாலை வழியே நடந்து சென்று வாக்குச்சாவடியை அடைந்தனர்.
போடி ஊராட்சி ஒன்றியத்தில் குரங்கணி, போடி மெட்டு, கொட்டக்குடி, முந்தல், காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. இன்று நடைபெறும் தேர்தலுக்காக அங்கு 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொட்டக்குடி பஞ்சாயத்தில் உள்ள 3 வாக்குச்சாவடிகளுக்கு சாலை வசதி இல்லை. எனவே பெரியாற்று கோம்பை மற்றும் அருங்குளம் அடிவாரம் வரை வாக்குப் பெட்டிகளை ஜீப்பில் கொண்டு சென்றனர்.
பின்னர் குதிரைகள் மூலம் 14 கி.மீ. தூரத்தில் உள்ளவாக்குச்சாவடிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
இக்குழுவினர் கேரள மாநில எல்லைக்குள் சென்று பூப்பாறை, பெரிய கானல், முட்டுக்காடு வழியாக டாப் ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் சென்றனர்.
தருமபுரி மாவட்டத்தில்...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை, கோட்டூர் ஆகிய மலைக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேற்று கழுதை கள் மீது வாக்குப் பெட்டிகள். தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு அதிகாரிகள் கிராமங்களை சென்றடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT