Published : 30 Dec 2019 07:32 AM
Last Updated : 30 Dec 2019 07:32 AM
நாமக்கல் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்சியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஆய்வாளர், அவரது மனைவி, குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி டோல்கேட் - 1 ஷீரடி நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). பொதுப்பணித் துறையில் பாசன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவிப்பிரியா (34). மகன் சாய் கிருபா (2). சாய் கிருபாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள இயற்கை நல மருத்துவமனைக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதுபோல நேற்று முன்தினம் சிகிச்சை அளிப்பதற்காக அசோக்குமார் குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு காரில் சென்றார். இவர்களுடன் தேவிப்பிரியாவின் தந்தை ராஜாமணி (65), தாய் கோமதி (60) ஆகியோரும் சென் றுள்ளனர். காரை அசோக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.
சாலையோரம் நின்றிருந்த லாரி
சிகிச்சை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட்டனர். நேற்று மாலை 4.30 மணியளவில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே களங்காணி ரெட்டிப்புதூர் பகுதியில் வந்தபோது பெட்ரோல் பங்க் முன்புறம் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இதில், அசோக்குமார், அவரது மனைவி தேவிப்பிரியா, குழந்தை சாய் கிருபா மற்றும் ராஜாமணி, கோமதி ஆகிய 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து மதுரைக்கு பருப்பு லோடு ஏற்றி வந்த லாரியை அதன் ஓட்டுநர் தஸ்தகீர் (50) சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தபோது விபத்து நடந்துள்ளது தெரியவந் துள்ளது. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT