Published : 30 Dec 2019 07:30 AM
Last Updated : 30 Dec 2019 07:30 AM

பாஸ்டேக் அட்டை கெடுபிடியால் சுங்கச்சாவடிகளில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சென்னை

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டை கட்டண முறையை கட்டாயமாக்கி கெடுபிடி செய்வதால், வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கவும், வாகனங்கள் திருட்டு, சட்டவிரோதமாக பொருட்களை கடத்திச் செல்லுதல் போன்ற சம்பவங்களை தடுக்கவும் பாஸ்டேக் (FASTag - மின்னணு கட்டணம்) முறையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த கட்டண முறையை கட்டாயமாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா 2 பாதைகளில் பணம் கொடுத்து பயணம் செய்யலாம்.

இந்த சலுகை வரும் ஜனவரி 14-ம்தேதி வரை அளிக்கப்படும் என தேசியநெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. இருப்பினும், பரனூர் உள்ளிட்ட சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்கி கெடுபிடி செய்வதால், நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதேபோல், பாஸ்டேக் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டைகள் இருப்பு இல்லை. கட்டண தொகை பிடித்தம் தொடர்பான விபரங்களுக்கான எஸ்எம்எஸ் தாமதமாக வருகிறது. சில நேரங்களில் எஸ்எம்எஸ் வருவதே இல்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, “பாஸ்டேக் அட்டையை கட்டாயம் பயன்படுத்த வரும் 14-ம் தேதி வரையில் சலுகைஅளிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வாங்கிய பிறகே, பாதைகளில் செல்ல முடியும் என கெடுபடி செய்வதால், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பாஸ்டேக் அட்டைகள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது பாஸ்டேக் அட்டை இல்லாத வாகனங்கள் பாஸ்டேக் பாதையில் செல்ல தற்காலிகமாக அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் (மின்னணு கட்டணம் வசூல்) முறையை படிப்படியாக கட்டாயமாக்கி வருகிறோம். தற்போதுள்ள நிலவரப்படி, மொத்த சுங்கச்சாவடி கட்டண வசூலில் 60 சதவீதம் பாஸ்டேக் முறையில் வரத் தொடங்கியுள்ளது. பாஸ்டேக் அட்டை தொடர்பாக சில இடங்களில் தொழில்நுட்ப புகார்கள் வருவதை கண்டறிந்துள்ளோம். இதற்குவிரைவில் தீர்வு காண சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர்களுக்கு அறிவுறுத்தி யுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x