Published : 30 Dec 2019 07:25 AM
Last Updated : 30 Dec 2019 07:25 AM
‘தி இந்து’ குழுமத்தின் ‘தமிழ் திசை’ சார்பில் 'பாரதியின் பூனைகள்', 'மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?' ஆகிய இரு நூல்கள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன.
‘தி இந்து’ குழுமத்தின் ‘தமிழ்திசை’ சார்பில் 'பாரதியின் பூனைகள்' மற்றும் 'மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?'ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் உள்ள ‘தமிழ் திசை’ அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், மருதன் எழுதியுள்ள 'பாரதியின் பூனைகள்' நூலை மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை உதவி ஆணையர் பூ.கொ. சரவணன் வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் சம்பத் பெற்றுக்கொண்டார். அதேபோல், ஏயெம் எழுதியுள்ள 'மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி? ' நூலை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக யோகா துறை உதவி பேராசிரியை செல்வ லஷ்மி வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் ஜனனி ரமேஷ் பெற்றுக்கொண்டார்.
புதுமையான உணர்வு
இந்நிகழ்ச்சியில் மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை உதவி ஆணையர் பூ.கொ.சரவணன் பேசியது: பாரதியின் பூனைகள் நூலானது ஓர் எளிய புத்தகம் போல் தோன்றினாலும் அதை நன்கு கவனித்தால் புதுமையான உணர்வை ஏற்படுத்தும். இந்தப் புத்தகம் குழந்தைகளை பாரதியின் பக்கம் நெருங்க வைக்கிறது. நூலில் பூனைகள் பற்றி எழுதப்பட்டாலும் உண்மையில் அது பூனைகள் பற்றி பேசவில்லை.
சமூக சமத்துவம்
அது, சாதி, நிற பாகுபாடு, சமூக சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி பேசுகிறது. இந்தப் புத்தகத்தை குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள். பெரிய உண்மைகளை அவர்கள் இயல் பாக புரிந்துகொள்வார்கள். குழந் தைகளின் இயல்பை இழக்கச் செய்யாமல் அதேநேரத்தில் அவர்களை ஊக்குவிக்கும் அருமையான படைப்பு இந்த நூல்.
இவ்வாறு பேசினார்.
விளையாட்டு பல்கலைக்கழக யோகா துறை உதவி பேராசிரியை செல்வ லஷ்மி பேசும்போது, "யோகா என்பது ஒரு முழுமையான மனநல மருத்துவம், அது 8 படி நிலைகளை உள்ளடக்கியது. யோகாசனங்களில் ஒன்று சூரிய நமஸ்காரம். இது 12 நிலைகளை உள்ளடக்கிய ஒரு பயிற்சி. பிராணாயாமம், உடற்பயிற்சி, மந்திரங்கள் ஆகிய மூன்றின் பயன்களையும் சூரிய நமஸ்காரம் மூலம் பெறலாம்" என்றார்.
வாசகர்களுடன் கலந்துரையாடல்
இதைத் தொடர்ந்து நூலாசிரியர்கள் மருதன், ஏயெம் ஆகியோர் வாசகர்களுடன் கலந்துரையாடினர். வாசகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர். முன்னதாக, ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ‘இந்து தமிழ்’ உதவிசெய்தி ஆசிரியர் எஸ்.சுஜாதா அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் தலைமை வடிவமைப்பாளர் மு.ராம்குமார் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT