Published : 30 Dec 2019 07:19 AM
Last Updated : 30 Dec 2019 07:19 AM
புத்தாண்டு மாமூலாக ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்தி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அயப்பாக்கம் பச்சையப்பன் நகரை சேர்ந்தவர் முகேஷ். தொழிலதிபரான இவர் அம்பத்தூரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வில்லிவாக்கம் ஐசிஎப் அருகே வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு அதில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரபல ரவுடி தில்பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் திடீரென முகேஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், அவரை கத்தி முனையில் காரில் கடத்திச் சென்றுள்ளனர். போகும் வழியில், புத்தாண்டை முன்னிட்டு தங்களுக்கு மாமூலாக ரூ.25 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் முகேஷ், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஐசிஎப்-ல் இருந்து கோயம்பேடு சென்று பின்னர், அங்கிருந்து மதுரவாயல் நோக்கி செல்லும்போது காரிலேயே அவரை ரவுடி கும்பல் பீர்பாட்டிலாலும் தாக்கியுள்ளது. பின்னர், கார் மதுரவாயல் காவல் நிலையம் அருகே சென்றபோது காரின் பின்புறம் உள்ள கதவு வழியாக கீழே குதித்து முகேஷ் தப்பியுள்ளார். பின்னர், மதுரவாயல் காவல் நிலையம் நோக்கி ஓடியுள்ளார். அவரை ரவுடி கும்பல் துரத்தியுள்ளது. காவல் நிலையம் அருகே சென்றவுடன் அதே காரில் ரவுடிகள் தப்பினர்.
முன்னதாக கடத்தல் கும்பல் முகேஷிடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், ஐ போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது.
இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிந்து தில்பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT