Published : 30 Dec 2019 07:10 AM
Last Updated : 30 Dec 2019 07:10 AM
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், தீவுத்திடல் அருகில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 2,092 குடும்பங்களை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மறு குடியமர்த்தும் பணி நேற்று தொடங்கியது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, கூவம் மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்து வரும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வில் கூவம் ஆற்றின் கரையோரங்களை ஆக்கிரமித்து மொத்தம் 14,257 வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த குடும்பங்கள், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதுவரை கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை தீவுத்திடல் அருகில் சத்யவாணி முத்து நகர் பகுதியில் வசித்து வந்த 2,092 குடும்பங்களை பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கின. பொதுமக்கள் வெளியேறிய வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, "எங்கள் தொழில், குழந்தைகளின் படிப்பு ஆகியவை சென்னை சென்ட்ரலை சுற்றியே அமைந்துள்ளன. இந்நிலையில் எங்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடு வழங்குவதால் குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்புகள் ஏற்பட்டு, கல்வியில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. தொழிலுக்காக பெரும்பாக்கத்தில் இருந்து வர வேண்டி உள்ளது. அதற்கான பேருந்து வசதிகளையாவது அரசு ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "இங்குள்ள குடும்பங்கள் பெரும்பாக்கம் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களுக்கு 3 நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகிறோம்” என்றனர்.
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் கூறும்போது, “ இப்பகுதியில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அவர்கள், பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்படும். இக்குடும்பங்களுக்கு இடமாற்றப் படியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேலும் வாழ்வாதார உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT