Published : 29 Dec 2019 05:36 PM
Last Updated : 29 Dec 2019 05:36 PM
சென்னையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து பிறகு விடுவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் பல்வேறு மாவட்டங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள் இந்த சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் சிலர் இன்று தெருக்களில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராகக் கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.நோ என்ஆர்சி, நோ சிஏஏ என்ற வாசகத்துடன் பெண்கள் கோலமிட்டனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் நடத்தி வருவது குறித்து போலீஸார் அறிந்தவுடன் அந்த பெண்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பெசன்ட் நகர் பஸ்நிலையம் அருகே காலை 7 மணி முதல் 10 மணி வரை கோலம் வரைந்து குடியுரிமை திருத்தச்சட்டம் என்ஆர்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்காரர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதால் அனுமதியளிக்கவில்லை.
கோலம் போடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை, ஆனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் அவர்களை அப்புறப்படுத்தினோம்" எனத் தெரிவித்தார்
போலீஸாரிடம் ஏன் அழைத்துச் செல்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, முன் அறிவிப்பின்றியும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் கோலமிட்டதால் இந்த பெண்களை அழைத்துச் செல்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதன்பின் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட பெண்களுக்கு போலீஸார் எச்சரிக்கை செய்து சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
ஆனால், கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தங்களிடம் போலீஸார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள் என்றும் செல்போனை பிடுங்கினார்கள் என்றும் குற்றம்சாட்டினர்.
கோலம் போட்டு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்களை போலீஸார் கைது செய்தமைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.கனிமொழிஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT