Published : 29 Dec 2019 07:43 AM
Last Updated : 29 Dec 2019 07:43 AM
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் அர்ச்சகர், எழுத்தர், ஓதுவார் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், அரசு ஊழியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, 7-வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், அரசாணை அமல்படுத்தப்படாததால் கோயில் பணியாளர்கள் பழைய ஊதியத்தையே பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், கோயில் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருக்கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சம்பள விகிதங்களை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தர விட்டுள்ளார்.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 7-வதுஊதிய குழுவின் மூலம் பரிந் துரை செய்யப்பட்ட சம்பள விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும், ஒரு சில இடங்களில் நடைமுறைப்படுத்தவில்லை என்று தகவல்கள் வந்தன. எனவே, தமிழகம் முழுவதும் அரசாணை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கோயில் பணியாளர்களுக்கு சம்பள வீதம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்கும்படி இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT