Published : 18 Aug 2015 06:57 PM
Last Updated : 18 Aug 2015 06:57 PM
என்எல்சி தொழிலாளர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய நிலக்கரித் துறைக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நடக்கும் வேலை நிறுத்தத்தால், நெய்வேலி மின் உற்பத்தி மையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஏற்கெனவே கடந்த மாதம் 22-ம் தேதி இப்பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு எழுதிய கடிதத்தில், என்எல்சி-யின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்கள் சங்கங்கள் விரைவான மற்றும் திருப்தியான சம்பள உயர்வு கோரி ஜூலை 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட்டிருந்தேன். மேலும், மத்திய நிலக்கரித் துறைக்கு அறிவுறுத்தி என்எல்சி ஊழியர்களது கோரிக்கை தொடர்பாக சுமூகமான உடன்பாடு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
ஆனால், இதுவரை வேலைநிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு உடன்பாடும் நிலக்கரித் துறையால் எட்டப்படவில்லை. தற்போது அந்த தொழிலாளர்கள், பணிக்கு செல்லும் என்எல்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை தடுப்பதால், சுரங்கப் பணியும், மின் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.
என்எல்சி மூலம் தமிழகத்துக்கு 1450 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது என்பது நீங்கள் அறிந்த விஷயம். தற்போது நடந்து வரும் வேலை நிறுத்தத்தால், அங்கு 2990 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1450 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை.
எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு என்எல்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய நிலக்கரித் துறைக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் மின் விநியோகம் பாதிக்கப்படும். எனவே, இந்த விஷயத்தில் தங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT