Published : 28 Dec 2019 01:29 PM
Last Updated : 28 Dec 2019 01:29 PM
ஸ்டாலின் மக்களை குழப்பி சூழ்ச்சி செய்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.28) சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்படுமா என, செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "1872-ல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிவிக்கப்படும். 2003-ல் மத்தியில் ஆட்சி செய்த பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தது. அப்போதுதான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2010-ல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போதுதான், மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால், இப்போது திமுக அதனை எதிர்க்கிறது. அவர்கள் ஆட்சியில் கொண்டு வந்த சட்டம் தான். வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என விமர்சிக்கின்றனர். 2010-ல் காங்கிரஸ் கொண்டு வந்ததைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். எந்த மாற்றமும் இல்லை.
தேசிய குடியுரிமை பதிவேட்டுக்காக (என்.ஆர்.சி.) தமிழகத்தில் கணக்கெடுக்கவில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேட்டைத்தான் (என்.பி.ஆர்.) பின்பற்றுகிறோம். இதனை எதிர்ப்பதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது. மக்களிடம் செல்வாக்கு இல்லாத கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துகொண்டு திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு கொடுக்கின்றனர்.
என்ஆர்சி எங்கும் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதற்கு மேலும் போராட்டம் நடத்துவோம் என்று சொன்னால் என்ன செய்வது. இளைஞர்களும் பொதுமக்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டாலின் மக்களை குழப்பி சூழ்ச்சி செய்கிறார். சிறுபான்மை மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், குடும்பத் தலைவர் பெயர், சொந்த வீடு விவரங்கள், வீட்டிலுள்ள அறைகள், குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள், சமையல் எரிபொருள், ரேடியோ, டிவி, கணினி, இணைய வசதி உட்பட 34 விவரங்கள் பதிவு செய்யப்படும்.
தேசிய குடியுரிமை பதிவேட்டில், தனித்தனியாக ஒவ்வொருவரின் பெயர், குடும்ப தலைவர், திருமண விவரம், முகவரி, கல்வி, தொழில் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT