Published : 28 Dec 2019 08:33 AM
Last Updated : 28 Dec 2019 08:33 AM

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கு

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகளை தடுக்க வாக்கு பெட்டிகள் வைக்குமிடம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்க உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சேலம் முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ஏ.ராஜா, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக செய்தி தொடர்பாளர் நன்மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பார்வேந்தன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள அவசர மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது உள்ளாட்சித் தேர்தல் விதிகள்கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும். ஆனால், ஆளும் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மூலமாக தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி-க்களுக்கும் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். முதற்கட்ட வாக்குப்பதிவு 27-ம் தேதி முடிந்து 5 நாட்கள் கழித்தே வரும் ஜன.2-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த இடைப்பட்ட நாட்களில் வாக்குகள் பதிவான வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மாநில தேர்தல் ஆணையத்தின் முக்கியமான பொறுப்பு.

போலீஸ் பாதுகாப்பு

தற்போது ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், இந்த வாக்குகள் அனைத்தும் ஒரே வாக்குப்பெட்டியில் போடப் பட்டு, அவை வாக்கு எண்ணிக் கையின்போது தனித்தனியாக பிரிக்கப்பட்டு முறையாக எண்ணப்பட வேண்டும். இதில் ஆளுங்கட்சியினர் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடாத வண்ணம் வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும்.

எனவே தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் 1995-ல் உள்ள விதிகளை கட்டாயமாக பின்பற்ற மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மேற்பார்வையிட வேண்டும். அதை அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

அதேபோல வாக்குபெட்டிகள் உள்ள இடங்களையும் அவ்வப் போது பார்வையிட வேட்பாளர்கள் அல்லது முகவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஆட்சேபம் தெரிவித்தால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். வாக்குச்சீட்டுகளை பத்திரப்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், மாநில தேர்தல் ஆணையச் செயலர், தமிழக டிஜிபி மற்றும் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி-க்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் வரும் டிச.30 அன்று விடுமுறை கால நீதிமன்றத்தில் அவசர வழக்குகளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x