Published : 28 Dec 2019 07:58 AM
Last Updated : 28 Dec 2019 07:58 AM
உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை, ஊர்க்காவல்படை, முன்னாள் ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு ஊதியமாக ரூ.13 கோடியே 52 லட்சத்து 40 ஆயிரத்து 375 ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை, ஊர்க்காவல்படை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கான ஊதியம் தொடர்பாக தமிழக உள்துறை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ராணுவத்தினரில் இளநிலை அதிகாரிகள் நிலையில் இருந்தவர்கள் 375 பேர், ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் 200 பேருக்கு தினசரி தலா ரூ.900, இதர படைப்பிரிவினர் 2,675 பேர், காவல்துறையில் ஓய்வுபெற்ற உதவி எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் 1,300 பேருக்கு தலா ரூ.750 என, 2 கட்ட தேர்தலுக்கும் சேர்த்து ரூ.1 கோடியே 38 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காவல்துறையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் 4,505 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் 175 பேருக்கு தலா ரூ.400, தாலுகாவில் காவலர்கள் உள்ளிட்ட 48 ஆயிரத்து 711 பேருக்கும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் ஹவில்தார் முதல் காவலர் வரை 3,500 பேருக்கு தலா ரூ.325-ம் தினசரி ஊதியமாக வழங்கப்படும்.
இதுதவிர, ஊர்க்காவல் படையினருக்கு முதல்கட்டத்தில் 10 ஆயிரம் பேர், 2-ம் கட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு தினசரி தலா ரூ.710 என, மொத்தமாக 12 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரத்து 375 ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொகை ஒதுக்கப்பட்டது குறித்து தமிழக டிஜிபியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், இந்தத் தொகையை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் விரைவில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT