Published : 27 Dec 2019 07:16 PM
Last Updated : 27 Dec 2019 07:16 PM

என்ன செய்தார் எம்.பி.?- மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள்: தமிழகத்தில் வசந்தகுமார் முதலிடம்

சென்னை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் 17வது மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழக எம்.பி.க்களில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் முதலிடம் வகிக்கிறார்.

பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கடந்த பத்து ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் எம்.பி.க்களின் பணி பற்றி ஆய்வு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்து 17-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு முதல் நாள் முதல், நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடர் வரை தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்ற விவரத்தை பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் தொகுத்துள்ளது. பிஆர்எஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிபடையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மக்களவை உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்பது, தனி நபர் மசோதா தாக்கல் செய்வது, முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது பணி மதிப்பிடப்படுகிறது. அதன்படி 17-வது மக்களவையின் முதல் அமர்வு முதல் டிசம்பர் 13-ம் தேதி வரையிலான குளிர்காலக் கூட்டத்தொடர் வரையிலான காலத்தை கணக்கிட்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

முதலிடம் யாருக்கு?

விவாதங்கள், தனி நபர் மசோதா, கேள்விகள் ஆகிய 3-ன் அடிப்படையில் தமிழக எம்.பி.க்களில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் 109 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார். கடந்த முதல் கூட்டத்தொடரிலும் அவர் முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 28 விவாதங்கள், 2 தனியார் மசோதாக்கள் மற்றும் 79 கேள்விகள் கேட்டு, முதலிடம் வகிக்கிறார். 95 சதவிகித கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

எம்.பி. வசந்தகுமார் கடந்த முதல் கூட்டத்தொடரில் மொத்த மக்களவையிலும் 27ம் இடத்தை பெற்று இருந்தார். தற்போது, 2 இடங்கள் முன்னேறி 25ம் இடத்தை பெற்றுள்ளார்.

நாகை எம்.பி. செல்வராஜ்

தமிழக அளவில் இரண்டாம் இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகபட்டினம் எம்.பி. செல்வராஜ் பிடித்துள்ளார். இவர் 28 விவாதங்களில் பங்கேற்று 55 கேள்விகள் எழுப்பியும் 84 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். 79 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தும், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.பி. செல்வமும் தலா 78 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x