Published : 27 Dec 2019 06:59 PM
Last Updated : 27 Dec 2019 06:59 PM

உள்ளாட்சித் தேர்தல்; முதற்கட்ட வாக்குப்பதிவில் ஆளும் கட்சி அத்துமீறல்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆளும்கட்சியினரின் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களோடு நடந்து முடிந்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆளும்கட்சியினரின் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களோடு நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் வாக்குச் சாவடிகளில் நடந்துகொண்ட விதமும் அவர்கள் நிகழ்த்திக்காட்டிய வன்முறை வெறியாட்டங்களும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது.

வாக்குப்பதிவு நாளன்றுகூட பணத்தை தண்ணீராகச் செலவழித்து, வாக்காளர்களை வளைக்க ஆளும்கட்சி முயற்சித்ததைப் பார்த்தால், எந்தளவுக்கு அவர்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் ஒரு விலைபொருளாகப் பார்க்கிறார்கள் என்ற வேதனையான உண்மை புரிகிறது.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் தேர்தல் களத்தில் தேனீக்களாய் சுழன்று களப்பணி ஆற்றியதற்காக எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை நேர்மையான வகையில் நிறைவேற்றிட வகை செய்யும் இந்த உள்ளாட்சித் தேர்தலில், இவ்வளவு தூரத்திற்கு பணத்தை தண்ணீராக வாரியிறைத்து வாக்குகளை வாங்கி ஒருவர் வெற்றி பெற்றால், எப்படி நேர்மையாகச் செயல்படுவார்?

அந்த நபர் முதலீடு செய்த பணத்தை மீட்டெடுக்க முயலும்போது, அவரால் நிறைவேற்றப்பட இருக்கும் அடிப்படை வசதிகள் எப்படித் தரமுள்ளதாக அமையும்? என்ற நியாயமான கேள்வி எழுகிறது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் இந்த ஆபத்து பற்றி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ள பகுதி மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து பயந்தோ அல்லது வேறு சில சுயலாபங்களுக்காகவோ சில அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்குப்பதிவு மையங்களில் நடந்துகொண்டதாக செய்திகள் வந்தன. அப்படிப்பட்ட அதிகாரிகளிடம், இது எந்தளவுக்கு தவறான செயல், பின்னாளில் நீதிமன்ற வாசலுக்கு சென்றால் அவரது அரசுப் பணி என்னவாகும் என்பதை எச்சரித்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முறைகேடுகள் இன்றி ஜனநாயக முறைப்படி நடக்க வழிவகை செய்யுங்கள்.

அதேபோல, வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளிலும் அதிகாரபலத்தையும் வன்முறையையும் பயன்படுத்தி ஆளும்கட்சியினர் அத்துமீறி முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய செயல்களை விழிப்புடனும், புத்திசாலித் தனத்துடனும் செயல்பட்டு தடுக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது தவறுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளிடம், நீதிமன்றங்களின் மூலம் கிடைக்க இருக்கும் தண்டனைகளை நினைவுபடுத்தி, முழு வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடக்கும் வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x