Published : 27 Dec 2019 06:49 PM
Last Updated : 27 Dec 2019 06:49 PM
தமிழகம் அனைத்து துறைகளிலும் அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை மூடி மறைப்பதற்கு தமிழகம் முதலிடம் என மத்திய அரசு தமது துறையின் மூலமாக அறிக்கைகளை வெளியிடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
‘‘மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் நற்சான்றிதழ் வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நற்சான்றிதழ் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதற்கான எந்த விளக்கமும் தெரியவில்லை.
மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆதரவு தெரிவிக்கிற காரணத்தினால் இத்தகைய நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஆனால், தமிழகத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்தால் பல துறைகளில் படுபாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை பாரபட்சமற்ற அரசியல் நோக்கர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.
தமிழக அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்தால், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவதை யாரும் மறுக்க முடியாது. தமிழக அரசின் மொத்த வருவாய் ரூபாய் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடி. இதில் பற்றாக்குறை ரூபாய் 14 ஆயிரத்து 314 கோடி. அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்குவது ரூபாய் 55,399 கோடி. ஓய்வுகால ஊதியங்கள் வழங்க வேண்டியது ரூபாய் 29,627 கோடி. உணவு மானியம், மின்சார மானியம், கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் போன்ற திட்டங்களுக்கு ரூபாய் 82,673 கோடி. கடனுக்கு வட்டி ரூபாய் 33,226 கோடி. இந்த வகையில் மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 99 ஆயிரத்து 925 கோடி செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. வருவாயை விட செலவு அதிகமாக இருக்கிற நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவழிக்க தமிழக அரசிடம் எங்கே நிதி இருக்கிறது ?
இந்நிலையில், தமிழக அரசின் மொத்த கடன் ரூபாய் 3.97 லட்சம் கோடியாக உள்ளது. இது மாநில மொத்த உற்பத்தியில் 23.02 சதவீதம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் ரூபாய் 55,026 கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. 2018-19 இல் 3.55 லட்சம் கோடியாகவும், 2017-18 இல் 3.14 லட்சம் கோடியாகவும் கடன் சுமை ஏற்கெனவே இருந்தது. இந்தச் சூழலில் தமிழக அரசின் நிதிநிலைமை அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிற நிலையில் தமிழகத்தை வளர்ச்சி மாநிலமாக மாற்றுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி எத்தகைய மாய வித்தையை செய்யப் போகிறார் என்று தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய அவல நிதி நிலைமையின் காரணமாகத் தான் மொத்த பட்ஜெட் தொகையில் கல்விக்கு 14.7 சதவீதம், சுகாதாரம் 5.1 சதவீதம், விவசாயத்திற்கு 6.3 சதவீதம், ஊரக வளர்ச்சி 2.6 சதவீதம், சாலைகள் மற்றும் மேம்பாலங்களுக்கு 4.8 சதவீதம், எரிசக்திக்கு 4 சதவீதம் என்று தேசிய சராசரியை விட பலமடங்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தகைய வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு அ.தி.மு.க. அரசை தாங்கிப் பிடித்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்த சூழல் இருப்பதால் இத்தகைய அறிக்கை வெளிவந்திருக்கிறது. தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் பா.ஜ.க., அ.தி.மு.க. எதிர்ப்பு எரிமலையை அடக்க ஆயிரம் அறிக்கைகள் வெளிவந்தாலும் மூடி மறைக்க முடியாது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து தலைவிரித்தாடி வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்து செயல்படுகிற தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர் வேலைக்கு 4,600 மனுக்கள் குவிந்துள்ளன. இந்த மனுக்களில் பொறியாளர்கள், முதுநிலை பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள் என தகுதிமிக்க பலர் மனு செய்திருப்பது தமிழகத்தின் வேலையில்லா திண்டாட்;டத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் பதிவு செய்து வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். சமீபத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது தற்காலிக ஆசிரியர்களுக்காக மனுக்களை தமிழக அரசு கோரிய போது 3 லட்சம் ஆசிரியர்கள் மனு செய்ததை எவரும் மறந்திட இயலாது.
மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் 9351 குரூப் 4 பணியிடங்களுக்காக 20 லட்சம் பேர் மனு செய்திருக்கின்றனர். இதன்மூலம் ஒரு பதவிக்கு 213 பேர் மனு செய்கிற அவலம் தமிழகத்தில் உள்ளது. படித்த பட்டதாரிகள் வேலை வாய்ப்பில்லாத காரணத்தால் உணவு பொருட்களை இருசக்கர வாகனங்களில் கொண்டு சேர்ப்பிக்கிற பணியில் சேர்ந்து நாள்தோறும் 12 முதல் 14 மணி நேரம் உழைத்து ரூபாய் 200 முதல் 400 வரை மட்டுமே சம்பாதிக்கிற மிக மோசமான நிலையில் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் இருப்பது அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருப்பது மிகுந்த வியப்பை தருகிறது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் காரணமாக மட்டும் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் 2016-17 ஆம் ஆண்டில் மூடப்பட்டிருப்பதாகவும், இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்ததாகவும் சம்மந்தப்பட்ட அமைச்சரே தமிழக சட்டப்பேரவையில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை மூடி மறைப்பதற்கு மத்திய அரசு தமது துறையின் மூலமாக இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதனால் உண்மை நிலையை எவரும் மறைத்து விட முடியாது. கடந்த காலங்களில் முன்னேறிய மாநிலங்களில் முன்னிலையில் இருந்த தமிழகம் இன்று வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு பல்வேறு சான்றுகள் ஆதாரமாக விளங்கி வருகின்றன. எனவே, மத்திய பா.ஜ.க. அரசின் ஜோடிப்பு அறிக்கைகளின் மூலம் மக்களின் எதிர்ப்பு அலையை தடுத்து நிறுத்தலாம் என்பது பகல் கனவாகத் தான் முடியும்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT