Published : 27 Dec 2019 04:45 PM
Last Updated : 27 Dec 2019 04:45 PM
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரணியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநில பாஜக சார்பில் இன்று (டிச.27) விளக்க பேரணி நடத்தப்பட்டது.
சுதேசி பஞ்சாலையில் இருந்து தொடங்கிய பேரணியில் பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் தலைமை தாங்கினார். நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, சங்கர் மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணி அண்ணா சாலை, நேருவீதி வழியாக சென்று, இறுதியில் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது.
பின்னர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தெரியாமல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி தூண்டிவிடுகின்றனர். 6 ஆண்டு காலமாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
திமுக, காங்கிரஸ் அரசியல் ஆதாயத்துக்காக போராட்டங்களை நடத்துகின்றனர். திமுக பாகிஸ்தானுக்கு ஆதாவாக உள்ளது. இது தேவையான சட்டம். இச்சட்டத்தின் மூலம் தீவிரவாதம், அந்நிதிய ஊடுருவல் தடுக்கப்படும். எதிர்கட்சியினர் போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளை தூண்டி விடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கூட்டணியில் உள்ள பிரதான எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT