Published : 27 Dec 2019 07:49 AM
Last Updated : 27 Dec 2019 07:49 AM
அடுத்த ஆண்டில் சோலார் மின் உற்பத்தி மூலம் 8 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலக இடங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் சோலார் தகடுகள் அமைத்து மின்உற்பத்தி செய்தல் உள்ளிட்ட புதிய திட்டங்களையும் படிப்படியாக மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை மொத்தம் 5.2 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் 260 கிலோவாட், மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் 20 கிலோவாட் திறனுக்கு சோலார் கருவிகள் நிறுவி மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 5.5 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி திறன் செய்துள்ளது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டில் 8 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.2.54 கோடி சேமிக்க முடியும் என திட்டமிட்டுள்ளோம். மேலும், கரியமில வாயுவின் வெளியீடு அளவு ஆண்டுக்கு 11,587 டன் ஆக குறையும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT