Published : 26 Dec 2019 01:28 PM
Last Updated : 26 Dec 2019 01:28 PM
ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் 3 மணிநேரம் நீடித்த சூரிய கிரகணத்தை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் எனப்படும். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன், சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
இன்று (டிச.26) வியாழக்கிழமை காலை சூரிய கிரகணத்தைப் பார்க்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர். காலை 8.06 மணி முதல் 11.15 மணி வரை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேல் நீடித்த சூரிய கிரகணத்தை அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வழங்கப்பட்ட சிறப்புக் கண்ணாடிகள் மூலம் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
சரியாக 9.34 மணி அளவில் சூரியனை சந்திரன் மறைத்து வட்ட வடிவில் வளையம் தோன்றியது. இந்நிகழ்வு, சுமார் ஒரு நிமிடம் மட்டுமே இப்பகுதியில் நீடித்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் மொபைல் போன்களில் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர். பாம்பன் பாலம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4 மணி வரையிலும் ஸ்படிக பூஜை நடைபெற்றது. 7 மணியளவில் நடை சாத்தப்பட்டது.
தொடர்ந்து 9.30 மணியளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பாடாகி அக்னி தீர்த்தக் கடற்கரையில் எழுந்தருளியதையடுத்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. மேலும் பகல் 12 மணியளவில் திருக்கோயில் நடை திறந்து கிரகண அபிஷேகம் நடைபெறும். இந்த தீர்த்தவாரி மற்றும் கிரகண சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT