Published : 26 Dec 2019 12:17 PM
Last Updated : 26 Dec 2019 12:17 PM

உதகையில் முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது: ஆர்வமுடன் கண்டுகளித்த மக்கள்

சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்

உதகை

உதகையில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரிந்தது. மக்கள் கிரகணத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று (டிச.26) காலை 8 மணியளவில் தொடங்கியது. உதகையில் இந்த கிரகணம் 94 சதவீதம் தெரியும் என அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ரேடியோ வானியியல் ஆய்வு மையம் சார்பில் முத்தோரையில் உள்ள ஆய்வு மையம் மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 8 மணியளவில் தொடங்கிய கிரகணம், காலை 9.26 மணிக்கு முழு நெருப்பு வளையம் தெரிந்தது. மொத்தம் 3 நிமிடங்கள் 7 நொடிகள் இந்த முழு நெருப்பு வளையம் தென்பட்டது. சூரிய கிரகணத்தைக் காண இந்தியாவின் பல இடங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் ரேடியோ வானியல் மையத்துக்கு வந்திருந்தனர்.

வானியல் ஆய்வு மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மும்பையில் உள்ள தேசிய வானியியல் மையம் சார்பில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தைக் காண வானியியல் ஆய்வு மையம் சார்பில் கண்ணாடிகள், தொலைநோக்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தெளிவாக தெரிந்தது

நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று கடும் மேகமூட்டமான காலநிலையாக இருந்தது. மேலும், லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனால், இன்று நிகழும் சூரய கிரகணத்தைப் பார்க்க முடியுமா? என சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை அதிர்ஷ்டவசமாக மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தது. இதனால், நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரிந்தது. பொதுமக்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.

உதகை முத்தோரை ரேடியோ வானியல் ஆய்வு மைய பொறுப்பாளர் திவ்யா ஓபராய் கூறும் போது, "சூரியன் மற்றும் பூமி இடையே நிலவு வருவதால் சூரிய கிரணம் ஏற்படுகிறது. சந்திரனை விட சூரியன் 400 மடங்கு பெரியது, ஆனால் ஒரே அளவு போல் கண்களுக்குத் தெரியக் காரணம் சந்திரன் 400 மடங்கு நெருக்கமாக வருகிறது என்பதால்.

திவ்யா ஓபராய்

உதகையில் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாகத் தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உதகையில் 94 சதவீதம் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் 2020-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி தோன்றும். தமிழகத்தில் 2031-ம் ஆண்டு மே 21-ம் தேதி தென்படும். வானியல் ஆய்வு மையம் சார்பில் தொலைநோக்கிகள் மற்றும் புரொஜெக்டர் மூலம் திரையில் சூரிய கிரகணக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன" என்றார்.

தென்னாப்பிரிக்கா நாட்டில் வானியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் நீரஜ்மோகன் சூரிய கிரணத்தைக் காண உதகை வந்திருந்தார்.

நீரஜ் மோகன்

அவர் கூறும் போது, "சூரிய கிரணத்தின்போது சாப்பிட கூடாது, குளிக்க வேண்டும் என்பதெல்லாம் மூட நம்பிக்கைகைகள். கிரகணம் போன்ற அறிவியல் நிகழ்வுகளை எல்லோரும் வெளியில் சென்று பார்க்க வேண்டும். கிரகணத்தின்போது சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். சந்திர கிரகணத்தின்போது நேரடியாகக் கண்ணால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தின்போது நேரடியாகப் பார்க்கக் கூடாது. நேரடியாகப் பார்த்தால் கண்கள் பாதிக்கும். இதற்காக சிறப்புக் கண்ணாடிகள் உள்ளன. அதன் மூலம் பார்க்க வேண்டும். தொலைநோக்கி மூலம் சூரியனின் பிரதிபலிப்பைத் திரையில் காணலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x