Published : 26 Dec 2019 09:26 AM
Last Updated : 26 Dec 2019 09:26 AM
பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டது குறித்து பாஜக ஒழுங்கு நட வடிக்கை எடுக்கும் என்று அக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பாஜகமுன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.வி.ஹண்டே, மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் வாஜ்பாய் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தங்க நாற்கரச் சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை என்று தனது ஆட்சிக் காலத்தில் சாதனை படைத்த, தனது வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த வாஜ்பாயின்95-வது பிறந்த நாளில் அவரைநினைவுகூர கடமைப்பட்டுள் ளோம். மத ரீதியாக நாடு பிளவுபடுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் எந்த மதத்துக்கும் எதிரானதுஅல்ல.
ஆனால், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக சிலர் இதை திசைதிருப்பி வருகின்றனர். மக்கள் ஆதரவுடன்தான் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலின்போது என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோமோ அதைத்தான் செயல்படுத்தி வருகிறோம். ஜார்க்கண்ட்டில் கடந்த 2014 பேரவைத் தேர்தலைவிட பாஜக அதிக வாக்குகளை பெற்றும் ஆட்சியை இழந்துள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து தவறுகள் சரி செய்யப்படும்.
மறைந்த தலைவர்களை விமர்சிப்பது தவறு. தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT