Published : 24 Dec 2019 03:17 PM
Last Updated : 24 Dec 2019 03:17 PM
மக்களை பிளவுபடுத்தும் மதவாதசக்திகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பெரியாரின் சிந்தனைகளை, லட்சியத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய காலம் இது, என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தந்தை பெரியார் ஈ.வே.ரா., வின் நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசு மதசார்பின்மையை ஒழித்துக்கட்டி மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மதசார்பற்ற கட்சிகள் இந்த சவாலை எதிர்கொள்ளவேண்டியதுள்ளது. எனவே தந்தை பெரியாரின் கருத்துக்களை அவரது சிந்தனைகளை லட்சியத்தை முன்னெடுத்துச்செல்வது என அவரது நினைவுதினத்தில் உறுதிஎடுக்கவேண்டும், என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியார் அமைப்புக்கள் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT