Last Updated : 24 Dec, 2019 12:58 PM

19  

Published : 24 Dec 2019 12:58 PM
Last Updated : 24 Dec 2019 12:58 PM

இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது: மதுரையில் இல.கணேசன் பேட்டி

மதுரை

இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி காலத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் நள்ளிரவில் அவசர சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அது தான் ஜனநாயகப் படுகொலை. அதை செய்யாமல் வெளிப்படையாக தெரிவித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அந்த விவாதத்தில் அனைத்துக்கட்சிகளை பேச அனுமதித்து சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. குடியுரிமை சட்டம் குறித்து பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டுகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை என்கின்றனர். இலங்கை தமிழர்களை பொருத்தவரை குடியுரிமை கேட்டால் வழங்கலாம். ஆனால் அவர்கள் குடியுரிமை கேட்கக்கூடாது. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி தங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. இலங்கைக்கு திரும்பி செல்ல தயாராக உள்ளோம். இலங்கை செல்வதற்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் போதும் என்றே அவர்கள் கேட்கின்றனர். இது தொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளேன்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் பேரணி நடத்தியுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்காளத்துக்கு மம்தா அழைத்துள்ளார். இந்த அளவுக்கு தான் மு.க.ஸ்டாலின் புகழ் பெற முடியும்.

அடுத்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி வைதிருப்பதால் இப்போது இருக்கும் எம்எல்ஏக்களை விட குறைந்த எம்எல்ஏக்களேயே திமுக பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை கட்சியினர் ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காக உண்மையில் பாடுபடுவோரை தேர்வு செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை. இருப்பினும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.

பேட்டியின் போது பாஜக மாநில செயலர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட செயலர் மகா சுசீந்திரன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x