Published : 24 Dec 2019 07:49 AM
Last Updated : 24 Dec 2019 07:49 AM
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து மைசூர் அரண்மனை, ஸ்ரீரங்கநாதர் ஆலயம், சாமுண்டி மலை உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்க சிறப்பு ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐஆர்சிடிசி பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டம் மூலம் ஆன்மிகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே, வரும்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் குறைந்த கட்டணத்தில் தனிரயில் மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 16-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு சுற்றுலா ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக அழைத்துச் செல்லப்படும். புகழ்பெற்ற மைசூர் அரண்மனை, சாமுண்டி மலை, பெரிய நீர்த்தேக்கமான கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் கார்டன், நஞ்சன்கூடு கண்டேஸ்வர சுவாமி, மேல்கோட்டை திருநாராயண சுவாமி, யோக நரசிம்மர், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயில், தலைக்காவிரி உள்ளிட்ட இடங்களை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 5 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.5,830 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல்களை பெற 9003140680, 8287932070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT