Published : 23 Dec 2019 04:20 PM
Last Updated : 23 Dec 2019 04:20 PM
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சூழலில் அரங்கிலிருந்து வெளியேற்றி தனியே அமர வைக்கப்பட்ட மாணவி ரபிஹா, தனது தங்கப்பதக்கத்தை திருப்பித் தந்தார்.
புதுச்சேரி ம்த்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் இன்று (டிச.23) நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பட்டமளிப்பு விழாவினைப் புறக்கணிக்க மாணவர் பேரவையினர் அழைப்பு விடுத்தனர். அத்துடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரும்போது மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலும் வெளியானது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அருண்குமார் மற்றும் கிருத்திகா ஆகியோர் தாங்கள் பட்டத்தைப் பெற மாட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு போலீஸார் கடும் கெடுபிடி விதித்தனர்.
ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் சுமார் 510 இருக்கைகள் மட்டுமே இருந்தன. இதில் பல்வேறு துறைகளில் தங்கப்பதக்கம் மற்றும் ஆராய்ச்சிப் பட்டம் பெறும் மாணவர்கள் 322 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் பேனா, பேப்பர், செல்போன் உள்ளிட்ட எதையும் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் தனித்தனியாக, முழுமையான பரிசோதனைக்குப் பிறகே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சூழலில் கேரள மாணவி ரபிஹா குடியரசுத் தலைவர் வருகைக்கு முன்பாக போலீஸாரால் அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தனியே அமர வைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் புறப்பட்ட பிறகே விழா அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றிருந்த போதிலும், மேடைக்கு அழைத்தபோது, அவர் தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து விட்டார். பட்டம் மட்டும் பெற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக ரபிஹா கூறுகையில், "கேரளம் கோழிக்கோட்டைச் சேர்ந்த நான் 2018-ம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றிருந்தேன். விழா தொடங்கும் முன்பு என்னை அரங்கிலிருந்து வெளியேற்றி தனியே அமர வைத்தனர். நான் தலைப்பாகை அணிந்தது குற்றமா எனத் தெரியவில்லை. காரணத்தையும் தெரிவிக்கவில்லை. என்னை வெளியேற்றி தனியாக அமர வைத்து அவமானப்படுத்தியதை மேடையில் தெரிவித்து எனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டேன். பட்டத்தை மட்டும் பெற்றேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT