Published : 23 Dec 2019 11:23 AM
Last Updated : 23 Dec 2019 11:23 AM
திமுக பேரணியின் காரணமாக, சென்னை புதுப்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த 17-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக இச்சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதையடுத்து 23-ம் தேதி சென்னையில் எதிர்க்கட்சிகளின் கண்டன பேரணி நடத்தப்படும் என, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்றிரவு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், பேரணியின் போது, சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் எனவும், பேரணியை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து உயர் நீதிமன்ற நிபந்தனைகளின் படி பேரணி நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று (டிச.23) ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் இருந்து எதிர்க்கட்சிகளின் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் பேரணியில் கலந்துகொண்டனர்.
காலை சுமார் 10.20 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பேரணி நடைபெறும் இடத்துக்கு வந்தார். இதையடுத்து, பேரணி தொடங்கியது. பேரணியில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கூவம் கரையோரத்தை ஒட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையைச் சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் திடலில் பேரணி நிறைவுறுகிறது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பேச உள்ளனர்.
இதனிடையே, பேரணிக்காக ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட பாதையிலிருந்து வேறு பாதையில் செல்லக்கூடாது என போராட்டக்காரர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பேரணியின் காரணமாக சென்னை புதுப்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ஆதித்தனார் சாலையில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT