Published : 23 Dec 2019 10:32 AM
Last Updated : 23 Dec 2019 10:32 AM

வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுரை

திருச்சி

வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சார இடங்களாக பயன்படுத்தக் கூடாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எந்த ஒரு வேட்பாளரும், சாதி, சமூகம், மதம் அல்லது மொழியினரிடத்தில் வெறுப்புணர்வை, கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு செயலிலும் ஈடுபடக் கூடாது.

வாக்குகளை பெறுவதற்காக சாதி, சமூக உணர்வுகளைத் தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சார இடங்களாக பயன்படுத்தக் கூடாது.

வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், வாக்காளர் ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஆதரவு திரட்டுதல், தேர்தல் நாள் மற்றும் வாக்குப் பதிவு முடிவு பெற நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துதல் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்று வர வாக்காளர்களுக்கு வாகனம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்றவற்றை செய்யக் கூடாது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனிநபர்களது கருத்துகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக அவர்களது வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்கள் அல்லது மறியல்களை நடத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.

எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ அக்கட்சியின், வேட்பாளரின் தொண்டர்களை எந்த ஒரு தனி நபர்களுடைய இடம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றில் தொடர்புடைய உரிமையாளரின் அனுமதியில்லாமல் கொடிக் கம்பங்கள் கட்டவும், பதாகைகள் வைக்கவும், அறிவிப்புகள் ஒட்டவும், வாசகங்கள் எழுதவும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ள இடத்தை அறிந்து கொள்ள உதவும் வகையில் வாக்குச்சாவடிக்கு அருகில் 200 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர் தேர்தல் அலுவலகங்களை அமைத் துக் கொள்ளலாம். அரசியல் கட்சியின் பிரதிநிதி எவரும் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் 200 மீட்டர் சுற்றுப் பகுதிக்குள் அமரக் கூடாது.

வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பிரச் சாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி குற்றமாகும். இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர் பிடியாணை ஏதுமின்றி காவல் துறையால் கைது செய்யப் படலாம்.

வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்குள் வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வருவதும், பிரச்சாரம் செய்வதும் ஒரு குற்றமாகும்.

தனியார் வாகனங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட வேண்டும்.

தேர்தல் சட்டத்தால் ஊழல் நடவடிக்கைகளாகவும், குற்றங் களாகவும் சொல்லப்பட்ட எந்தச் செயல்களையும் கண்டிப்பாக மேற்கொள்ளக்கூடாது என தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x