Published : 22 Dec 2019 07:02 PM
Last Updated : 22 Dec 2019 07:02 PM
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி வரும் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலர் சிவக்குமார் இன்று கூறுகையில், ''இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைச் செயல்படுத்துவதை எதிர்த்தும், இம்மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய அமைப்புகள் இஸ்லாமிய இயக்கங்கள், விவசாய சங்கங்கள் காலை 6 முதல் மாலை 6 வரை போராட்டம் நடத்த உள்ளன. இப்போராட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இப்போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசியப் பேரியக்கம், தமிழர் களம், உலகத் தமிழ்க் கழகம், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர்கள் கழகம், இஸ்லாமிய இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து இப்போராட்டத்துக்கு அனைத்து வணிகர் சங்கங்கள், சிறு, குறு வியாபார சங்கங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பேருந்து உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரின் ஆதரவைக் கோர உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நாளை சென்னையில் பேரணி நடத்துகிறது. இதில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்கின்றன.
புதுச்சேரியிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி வரும் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT