Published : 22 Dec 2019 04:03 PM
Last Updated : 22 Dec 2019 04:03 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அதிக சேதம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
''குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அதுகுறித்த போராட்டங்கள் குறையத் தொடங்கியுள்ளன. தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியுள்ளது.
போராட்டத்தைக் கலைக்க சுட்டுக்கொல்லாமல் விடப்பட்டால் பொதுச் சொத்துகள் எந்த அளவுக்கு சேதமாகும், அப்பாவி மக்கள் காலியாவார்கள் என்பதைத் தளத்தில் இருப்பவர்கள்தான் முடிவு செய்ய முடியும். துப்பாக்கிச் சூடு நடத்தாவிட்டால் பொதுச் சொத்துகள் அதிகம் சேதம் அடைந்திருக்கும்.
மிகக் குறைந்த சேதம் ஏற்படும், அதிக சேதம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றால் ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தகுதியுடையவர்கள், உரிமையுடையவர்கள் சட்டரீதியாக ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதில் தவறில்லை என்பது என் கருத்து. இதுதான் பகவத் கீதையின் சாரம்சம்.
வன்முறை இல்லாமல் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற இடதுசாரித் தலைவர்களின் கருத்தைப் பாராட்டுகிறேன்.
எந்த ஒரு செயலுக்கும் ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் மறுப்பு தெரிவிக்க, எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. கடையடைப்புப் போராட்டம், வேலை நிறுத்தம் என சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், வன்முறையில் இறங்குவதற்கு எவருக்கும் உரிமை இல்லை''.
இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT