Published : 22 Dec 2019 08:29 AM
Last Updated : 22 Dec 2019 08:29 AM
தென்காசி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு இடங்களில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் 70-க்கும் மேற்பட்ட நகை திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் ஆடிவேல், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தென்காசியில் குறிப்பிட்ட இடத்தில் அதிகளவு நகைகளை விற்பதற்காக சிலர் வருவதாக கடந்த 20-ம் தேதி மாலையில் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் சோதனை நடத்தி, தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் (35), அவரது தம்பி சுரேஷ் (32), தந்தை துரை (60), தாய் ராஜபொன்னம்மாள் (55) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வீடு எடுத்து தங்கி கைவரிசை
இவர்கள் 4 பேரும் சேர்ந்து, தென்காசி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் 165-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து, தூங்கும் பெண்களிடம் நகை திருடியது தெரியவந்தது. முருகனும், அவரதுதம்பி சுரேஷும் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருடிய நகைகளை விற்பனை செய்ய அவர்களது பெற்றோர் உதவியுள்ளனர். தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க திருடச் செல்லும் இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
இதற்காக, தென்காசி மாவட்டத்தில் 4 வீடுகளையும், திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி மற்றும் மதுரை அருகே திருமங்கலம் ஆகிய இடங்களில் தலா ஒரு வீட்டையும், அவர்கள் வாடகைக்கு எடுத்து வைத்துள்ளனர்.
இவர்கள், தென்காசி உட்கோட்டபகுதிகளில் 78 இடங்களில் திருடிய2 கிலோ 200 கிராம் நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் கூறும்போது, ‘‘காற்றுக்காக வீட்டு கதவைத் திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகள், வெளிப்புறத்தில் இருந்து எளிதாக கதவைத் திறக்கும் வகையில் உள்ள வீடுகள், மாடிப்படி வழியாக நுழைய ஏதுவாக உள்ள வீடுகளை நோட்டம் விட்டு இவர்கள் திருடியுள்ளனர்.
திருடிய இருசக்கர வாகனங்களில் சென்று வீடுகளில் கைவரிசை காட்டிய பின்னர், அந்த வாகனங்களை விவசாயக் கிணறுகளில் வீசிச் சென்றுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT