Published : 22 Dec 2019 07:43 AM
Last Updated : 22 Dec 2019 07:43 AM
‘இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே பொடிப் பொடியாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் துணைவேந் தர் க.ப.அறவாணனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. அறவாணன் எழுதிய ‘அறிஞர் போற்றுதும்’ மற்றும்அறிவாளன் பதிப்பித்த ‘அறவாணர் போற்றுதும்’ என்ற 2 புத்தகங்களைக் வைரமுத்து வெளியிட்டார்.
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக இணைவேந்தர் பெருமாள்சாமி தலைமை ஏற்ற இந்நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது: காரல் மார்க்ஸ் இறந்தபோது ஏங்கல்ஸ் ‘இவன் நூல்களின் அளவைப் பார்த்தால் இவன் காலமெல்லாம் எழுதிக் கொண்டே இருந்தான் என்று தோன்றுகிறது. அந்த நூல்களின் அடிக்குறிப்புகளைப் பார்த்தால் இவன் காலமெல்லாம் படித்துக் கொண்டே இருந்தான் என்று தோன்றுகிறது’ என்று எழுதியிருந்தார். மறைந்த துணைவேந்தர் அறவாணனும் காலமெல்லாம் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தவர். அவர்எழுதிய நூல்கள் இறந்த காலத்தில்முளைத்தவை. ஆனால், நிகழ்காலத்துக்கும் சேர்த்தே பழுத்தவை.
பண்பாட்டு படையெடுப்புகள்
போராளி இனமாக இருந்த தமிழர்கள் எந்த நூற்றாண்டில் போர்க்குணத்தை இழந்தனர் என்பதைச் சான்று காட்டி அறவாணன் எழுதியிருக்கிறார். நிலமும், பண்பாடும், பன்னாட்டுப் படையெடுப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகுதான் தமிழர்கள் போர்க்குணத்தை இழந்திருக்கிறார்கள். போராட்டம் என்பது உயிரின் இருப்பு. போராட்டம்தான் மனித வாழ்வை முன்னெடுத்தோடும் சக்கரம். கல்லில் இருந்து தீயைக் கடைந்தெடுத்தது ஒரு போராட்டம். மரத்தில் இருந்து சக்கரத்தை வடித்தெடுத்தது ஒரு போராட்டம். வேட்டைக் கலாசாரத்தில் இருந்து விவசாயக் கலாசாரத்துக்கு தாவியது ஒரு போராட்டம்.
மனிதகுலத்தின் அறிவுப் போராட்டமும் உரிமைப் போராட்டமும் ஓய்வதே இல்லை. இன்று மாணவர்களின் போராட்டத்தையும் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்குமுறை போராட்டத்தைத் தீர்மானிக்கிறது; அடக்குமுறை வன்முறையைத் தீர்மானிக்கிறது. வன்முறைக்கு எதிரியாக இருப்பவர்கள்கூட போராட்டத்துக்கு எதிரிகளாக இருக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே பொடிப் பொடியாக்குகிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். போராட்டத்தை நாடு விரும்பவில்லை. ஆனால் நாடு போராடுவதை விரும்பிவிடக்கூடாது. நாடு காக்கப்பட வேண்டும். நல்லதே நடக்க வேண்டும்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT